சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயராஜ் சுரானா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ''சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டில் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது.
அதில், மோசடி செய்து ஐடிபிஐ வங்கியில் இருந்து 1,495 கோடி ரூபாயும், எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து 1,188 கோடி கடன் வாங்கியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் 2024 ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது.
இதே வழக்கின் அடிப்படையில் மாற்று விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை விசாரணையை தொடர முடியாது என்பதால் அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ஒரு எப்ஐஆர் ரத்து செய்யப்பட்டால் அதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் மற்றும் விசாரணையை ரத்து செய்ய தேவையில்லை'' என தெளிவுப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு; மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல்!
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றம் குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் எப்ஐஆர்-ஐ ரத்து செய்யவில்லை. வழக்கின் தொழில்நுட்ப மற்றும் வழகாட்டுதல் அடிப்படையில் மட்டுமே வழக்கு ரத்து செய்துள்ளது. மற்ற காரணங்களை கருத்தில் கொள்ளவில்லை.
அதனால், ஒரு வழக்கில் பதிவு செய்யப்படும் எப்ஐஆர் ரத்து செய்யப்பட்டால், அந்த வழக்கின் தொடர்ச்சியாக மாற்று விசாரணை அமைப்பு தொடரும் விசாரணையை தானாகவே ரத்து செய்யப்பட்டதாக கருத முடியாது. தொடர்ந்து விசாரணை செய்யலாம் என உத்தரவிட்டுள்ளனர்.