சென்னை: சி.பா.ஆதித்தனார் 43வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான்,"முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கேரள அரசு கட்டக்கூடாது. அணை பலவீனமாக இருக்கிறதெனில் இரு மாநில அரசுகளின் ஒப்புதலோடு, நிதி பங்கீட்டுடன் அணைக்குள் ஓர் அணை கட்டலாமே? அதை விடுத்து ஏன் இடித்துக் கட்ட வேண்டும்? எனவே, முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணைக்கட்டுவதை ஏற்க முடியாது" என்றார்.
திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவர்கள் காவி உடை போடுவார்கள், இவர்கள் கருப்பு உடை போடுவார்கள். நாங்க இரண்டையும் கிழித்து தூரம் போடுவோம். அதற்கு வெகுநாட்கள் இல்லை. அதிகாரத்தில் இருப்பதால் இதுபோன்று செய்து வருகிறார்கள். எங்கள் வள்ளுவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? திராவிடத்துக்கும், வள்ளுவனுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிரதமர் மோடி ராமர், ராமர் என சொன்னார் எடுபடவில்லை, இப்போது தன்னையே ராமர் என கூறிக் கொள்கிறார். அவர் கோயில் கட்டவில்லை, அவருக்கு வீடு கட்டிக்கொண்டார்.
'பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபி தான் ஆள வேண்டும்' என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். ஆனால், தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என்று சொன்னால் மட்டும் விமர்சிக்கின்றனர். இதையெல்லாம் ஏப்ரல் 19-க்கு முன்பாக இவர்கள் பேசியிருக்க வேண்டும்.
அரசிற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? மதம் என்பது தனிப்பட்ட உணர்வு. இஸ்லாத்தை வெறுப்பது, எதிர்ப்பது தவிர இவர்களுக்கு வேறு என்ன அரசியல் இருக்கிறது?
தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறார். முதலில் அவர்கள் தனித்து நின்று போட்டியிட்டு காட்டட்டும். அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தனிப்பட்ட முறையில் பாஜக பெறும் வாக்குகள், நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருக்குமேயானால் கட்சியை கலைத்துவிடுகிறேன்" என்று பாஜகவுக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கார்த்திக் குமார் குறித்து பேச சுசித்ராவிற்கு இடைக்கால தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!