திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த A.K. மோட்டார் அருகே உள்ள புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவருக்கு திருமணமாகி அவருடைய முதல் மனைவி உடல்நிலை குறைவால் கடந்த 2006ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி (எ) ரேவதியை மறுமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் ரேவதிக்கு மைதிலி என்ற மகள் உள்ள நிலையில், அவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தன்னுடைய கணவர் சீனிவாசனிடம் சொல்லாமல் ரேவதி ரெட்டியூர் பகுதியில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டிற்கு மகள் மைதிலியை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.
அதன்பின் ரேவதியை கணவர் சீனிவாசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அப்போது ரேவதி வர மறுத்ததால் மகளிர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார்.
அப்புகாரின் பேரில் காவல்துறையினர் கணவன், மனைவி இருவரையும் வரவழைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சமாதானம் செய்து ரேவதியை கணவன் சீனிவாசானுடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ரேவதி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் விரக்தியில் இருந்த சீனிவாசன், தன் மனைவி ரேவதி தன்னுடன் வாழாமல் மகளை அழைத்துக் கொண்டு ரெட்டியூர் பகுதிக்கு சென்றதற்கு முழு காரணம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் அவருடைய மனைவி சுமதி தான் காரணம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சுமதி ரெட்டியூர் பகுதியில் வாக்கு சொல்லும் தொழில் செய்து வருவதாகவும், அதுமட்டுமில்லாமல் பில்லி, சூனியம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக சீனிவாசன் கூறி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகள் மற்றும் மனைவிக்கு ரவி மற்றும் சுமதி ஆகிய இருவரும் பில்லி சூனியம் செய்து வசியப்படுத்தி வைத்துள்ளதாகவும், இதனால் தான் தன்னுடன் மனைவி ரேவதி வாழ மறுப்பதாகவும், அது மட்டுமில்லாமல் ரவி மற்றும் சுமதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், அவர்களுக்கு தன்னுடைய மனைவியை திருமணம் செய்து வைப்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தன் மனைவி ரேவதி மற்றும் மகள் மைதிலியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜுலை 22) நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் சீனிவாசன் மனு ஒன்றை அளித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருப்பத்தூரை அதிர வைக்கும் ஜிஎஸ்டி மோசடி.. சாமானிய மக்களை குறிவைக்கும் கும்பலின் பின்னணி என்ன? - Tirupathur GST Tax Fraud Issue