அரியலூர்: அரியலூர் மாவட்டம், தேவாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "எனக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பாகவே சிலால் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு அவரது உறவினர்கள் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நாங்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், எனது கணவன் மதுபோதையில் தன்னை கொடுமைப்படுத்தி பாலியல் தொல்லை செய்து வருகிறார். அதேபோல் தான் அணிந்திருந்த நகைகளைத் தனது அனுமதி இன்றி பறித்துக் கொண்டு தன்னை தாக்கினார்.
கர்ப்பமாக இருந்த என்னைக் கடந்த 28ஆம் தேதி பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதால் காயம் அடைந்து ஜெயங்கொண்டான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கர்ப்பம் கலைந்து உடல் அளவில் பலவீனமாக இருந்தேன்.
எனவே, 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே தன்னை திருமணத்திற்குக் கட்டாயப்படுத்திய உறவினர்கள் அரசு, சந்திரா, சசிகலா, இந்திரா ஆகியோர் மீதும், என்னை திருமணம் செய்து கொண்ட பாலமுருகன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஜெயங்கொண்டான் அனைத்து மகளிர் காவல்துறையினர் பாலமுருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த கும்பல்.. போலீசார் தீவிர விசாரணை! - Highway Robbery