சென்னை: சென்னை, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பெண் கயல்விழி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும், வானகரம் பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத் (32) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பிறகு ஹரி பிரசாத் குடும்பத்தினர் கயல்விழியிடமிருந்து 15 சவரன் நகையை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, அவர் சமூகத்தின் பெயரைச் சொல்லி தொடர்ந்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்கும் இடையே தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஒரு கட்டத்தில் கணவர் குடும்பத்தினர் அனைவரும் கயல்விழியை வாடகை வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த ஹரி பிரசாத், கயல்விழியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளார். பின்னர் இருவரும் வாடகை வீடு எடுத்து தங்கி உள்ளனர். ஆனால், சில நாட்களிலேயே கயல்விழியிடமிருந்து ரூ.10,000 பணம் மற்றும் அவரது கல்விச் சான்றிதழை எடுத்துக் கொண்டு ஹரிபிரசாத் தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி, கடந்த மே மாதம் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த காவல்துறையினர், ஹரி பிரசாத் செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். அதன்படி, மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், நம்ப வைத்து மோசடி செய்தல், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து 15 சவரன் நகையையும், கல்யாணத்திற்காக தான் செலவு செய்த ரூ.4 லட்சத்தையும், கல்விச் சான்றிதழ்களையும் பெற்று தருமாறு பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-07-2024/22062824_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய பார் கவுன்சிலிடம் வலியுறுத்தல்! - new criminal laws