ஈரோடு: பெருந்துறையை அடுத்துள்ள எல்லப்பாளையம் பகுதியில் கணவன், மனைவியாக வசித்து வந்தவர்கள் கோட்டை ராஜா - மகாலட்சுமி தம்பதி. திண்டுக்கல் மாவட்டம், மல்லம்பட்டி நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் கோட்டை ராஜா (24). இவர் பல்லடம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். அப்போது, அங்கு பஞ்சு மில்லில் வேலை பார்த்து வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மகாலட்சுமி உடன் (25) பழக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டு, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மகாலட்சுமிக்கு பஞ்சு மில்லில் வேலை செய்ததால் ஆஸ்துமா பிரச்னை ஏற்பட்டு பஞ்சு மில்லுக்கு வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டு விவசாயக் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி சிவகார்த்தி என்ற கணவரும், 7- வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதும், குழந்தைக்கு ஒரு வயதாக இருக்கும் போதே மகாலட்சுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், தாய் மாதவியையும் விட்டுவிட்டு பல்லடம் பகுதிக்கு வேலைக்கு வந்தது கணவர் கோட்டை ராஜாவுக்கு தெரிய வந்தது.
இதனால் கோட்டை ராஜாவுக்கும், அவரது மனைவி மகாலட்சுமிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. மகாலட்சுமி முதல் கணவரும் ஒரு பெண் குழந்தையும் உள்ளதை மறைத்த பிரச்னையே தீராத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மகாலட்சுமி வேறு ஒரு நபருடன் வீட்டில் படுக்கையில் ஒன்றாக இருப்பதையும் கோட்டை ராஜா பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: 'யார் பெரிய ரவுடி?'.. தஞ்சையை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் கைது!
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து தினமும் மனைவி மகாலட்சுமியுடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிறு இரவு மகாலட்சுமிக்கும், அவரது கணவர் கோட்டை ராஜாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், காதலித்து திருமணம் செய்த மனைவி தனக்கு துரோகம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், தான் கட்டிய தாலியுடன் சேர்த்து மகாலட்சுமியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மகாலட்சுமி மயங்கியும், ஆத்திரம் தீராமல் மகாலட்சுமியை சேலையால் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்றுள்ளார் கோட்டை ராஜா.
இதன் பின்பு மகாலட்சுமியின் உடலை வீட்டிலேயே போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் நந்தகுமார், மகாலட்சுமி உயிரிழந்து கிடந்ததை கண்டு காவல் அவசர உதவி எண் 100-க்கு கால் செய்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல்துறையினர், மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சந்தேக மரணம் என முதலில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையிலும், பிரேதப் பரிசோதனையிலும் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கணவர் கோட்டை ராஜாவை பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, கோட்டை ராஜாவிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி கோட்டை ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்