சிவகங்கை: காரைக்குடியில் குடும்ப பிரச்சனையின் காரணமாக கணவர், மனைவி வீட்டில் தீ வைத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த மாவட்ட தெற்கு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 2வது வீதியில் வசித்து வந்தவர், தங்கராஜ் (60). இவரது மனைவி லதா (55). இவர்களது மூத்த மகன் நவீன்குமாருக்கு (30) திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர், சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2வது மகன் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக மனைவி லதா மற்றும் மகன்கள் தங்கராஜை மதிப்பது இல்லை என்றும் உணவு வழங்குவது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை வீடு முழுவதும் தீ வைத்துள்ளார். இதனால், தீயானது மளமளவென எரிந்து வீடு முழுவதும் பரவியதில், தங்கராஜ், அவரது மனைவி லதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மூத்த மகன் நவீன் குமார் தனது மனைவி மற்றும் குழந்தையைக் காப்பாற்றி வெளியில் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, தாயைக் காப்பாற்றச் சென்ற நவீனுக்கு 80% சதவீத தீக்காயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் உயிரிழந்த தம்பதியினரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா உதவி எண் 044-24640050 அழையுங்கள். இணைய வழித் தொடர்புக்கு 022-25521111 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: குழந்தைக்கு "ரோலக்ஸ்" என உதயநிதி பெயர் வைத்தாரா? அண்ணாமலை குற்றச்சாட்டு உண்மையா? - Lok Sabha Election 2024