கோயம்புத்தூர்: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் இவரது மனைவி உமா மகேஸ்வரி. இதில் பாண்டியராஜன் என்பவர் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பழனிக்குமார் என்பவரது நகைப் பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இதனால் அவருக்கும் பட்டறையின் உரிமையாளர் பழனிகுமாருக்கு இடையே நல்ல நட்பு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல நேரங்களில் தனது பட்டறையை பாண்டியராஜனை நம்பி விட்டு விட்டு வெளியூர் சென்று வந்துள்ளார் பழனிகுமார்.
இதனை அறிந்த பாண்டியராஜனின் மனைவி உமா மகேஸ்வரி, அவரது கணவரிடம் பட்டறையில் உள்ள நகைகளைத் திருடி விட்டு இருவரும் வெளியூர் சென்று விடலாம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.இதன் பின்னர் கடந்த மாதம் 17ஆம் தேதி பட்டறையில் யாரும் இல்லாத போது பாண்டியராஜன் 800 கிராம் (100 சவரன்) எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு மாயமானர்.
பட்டறையில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் பழனிக்குமார், அங்குப் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் பாண்டியராஜன் நகைகளைத் திருடிச் சென்றது போல் காட்சிகள் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த பழனிகுமார், இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் வழக்குப் பதிவு செய்த போலீசார், நகைகளைத் திருடிக் கொண்டு தலைமறைவான தம்பதிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் அருகே இருவரும் பதுங்கி இருப்பதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்குச் சென்று பாண்டியராஜனையும் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 800 கிராம் தங்கத்தையும் பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,"திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூபாய் 40 லட்சம் ரூபாய் இருக்கும். 9 ஆண்டுகாலக பணியில் ஈடுபட்டவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் கடையை விட்டுச் சென்றுள்ளார் உரிமையாளர். ஆனால் இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் திருடப்பட்ட அனைத்து நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றனர்.
இதையும் படிங்க: "நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்" அரசிதழில் அறிவித்த மத்திய அரசு! அடுத்து என்ன நடவடிக்கை?