திருநெல்வேலி : திருநெல்வேலி நீட் அகாடமி மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் 6 வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நீட் அகாடமியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் சிலரை அகாடமி உரிமையாளர் பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிமையாளர் மீது மேலப்பாளையம் போலீசார் சிறார் பாதுகாப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் தனியார் நீட் அகாடமிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மாணவிகள் தங்கி இருந்த விடுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் குழுவினரும் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது விடுதிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : நெல்லை நீட் அகாடமி விவகாரம்; புகார் அளிக்காமலேயே நடவடிக்கை சாத்தியமானது எப்படி? சட்டம் கூறுவது என்ன?
மேலும், இந்த விவகாரத்தில் தனியார் நீட் அகாடமி உரிமையாளர் கேரளாவுக்கு தப்பி சென்ற நிலையில், அவரை பிடிப்பதற்காக தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகள் முறையாக உரிமம் பெறவில்லை என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால், அகாடமி நிர்வாகம் விடுதிகளை காலி செய்தது.
இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்