சென்னை: வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (திங்கட்கிழமை) கிழமை, சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, வெளிநாடுகளில் இருந்துவந்த விமானங்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயிலிருந்து வந்த தனியார் விமானத்தில் வந்த பயணிகளை நிறுத்தி அவர்களிடம்சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இரண்டு பெண்கள் உட்பட 6 பயணிகள் அவர்களுடைய உடமைகள், உள்ளாடைகள் போன்றவற்றில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு வந்த மற்றொரு பயணிகள் விமானத்தில் சுங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், 4 பயணிகளிடம் இருந்து தங்கம் மற்றும் தங்கப் பசை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் இரண்டு விமானங்களில் 10 பயணிகளிடம் இருந்து, 7.58 கோடி ரூபாய் மதிப்புடைய 12.095 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், தங்கம் கடத்திய 10 பயணிகளையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாராணையில், இன்னும் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தல் கும்பல் தங்கம் கடத்தி வருவதாகத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் முகாமிட்டு வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளிடம் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்; ஆர்.என்.ரவி நாளை திடீர் டெல்லி பயணம்!