சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ரயில்வேயில் சிறப்பாக பணியாற்றும் 100 ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' (Ati Vishisht Rail Seva Puraskar) என்ற உயரிய விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதிற்கு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றும் ஜாபர் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
800 பயணிகளைக் காப்பாற்றிய ஊழியர்: கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி கனமழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு, ரயில்வே தண்டவாளம் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி, அவ்வழியாக செல்ல இருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினார். இதனால் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் 800 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இதுகுறித்து, ஜாபர் அலி, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில்,"இந்த விருது எனக்கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக எனக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.
அன்றைக்கு நடந்தது என்ன? சம்பவம் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை அன்று காலையிலிருந்தே தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது. ஆனாலும் 6 ரயில்களை எந்தவொரு பிரச்சனை இல்லாமல் அனுப்பிவிட்டோம். அன்றைய தினம் கடைசி வண்டி 'செந்தூர் எக்ஸ்பிரஸ்' ஆகும். இந்த ரயிலானது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு இரவு 9.10 க்கு வர வேண்டும்.
இதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதாவது 9.02க்கு செக்சன் இன்ஜினியர் எனக்கு ஃபோன் செய்து, "தண்டவாளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. எனவே ஒரு முறை சோதனை செய்துவிட்டு பின்னர் ரயிலை அனுப்புங்கள் என கூறினார். உடனே என்னுடைய மனதிற்கு ரயிலை நிறுத்தி வைப்பதுதான் சரி எனப்பட்டது.
இதனை தொடர்ந்து கண்ட்ரோலரை அழைத்து, நிலவரம் குறித்து விளங்கினேன். அவரும் ரயிலை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டார்.இதன் பிறகு 11 மணியளவில் செக்சன் இன்ஜினியர் தண்டவளததை சென்று பார்வையிட்ட போது, அது முழுவதும் சேதமடைந்து காணப்பட்டது.
அதன் பிறகு ரயிலை முழுவதும் இயக்க முடியாது என்ற அறிவிப்பு வந்தது. பின்னர் மாநில நிர்வாகத்திடம் பேசி, முதலில் 200 பயணிகளைப் பேருந்து மூலம் அனுப்பி வைத்தோம். அதன் பிறகு தாமிரபரணி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டிய நீர் செல்வதால் பேருந்து செல்ல முடியாது எனக் கூறிவிட்டனர்.
இதையும் படிங்க: 1.“புதுக்குடி கிராம மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்” ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் உருக்கம்!
2. "குழந்தைகளுக்காவது உணவு கொடுங்கள்" ரயிலில் சிக்கிய 500 பேர் தவிப்பு.. மீட்பு நிலவரம் என்ன?
கிராம மக்கள் உதவி: இதனால் ரயிலில் மீதம் இருந்த பயணிகள் பெரும் அச்சமடைந்தனர். மேலும் ரயிலில் இருந்த மின்சாரமும் தீர்த்துவிட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் ரயிலில் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என பலரும் இருந்தனர்.
அவர்களுக்கு கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் கூட உணவு ஏற்பாடு செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. அப்போது தான் ஸ்ரீ வைகுண்டத்திற்கு அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர், அவர்களால் முடிந்த உணவுப் பொருள்களைச் சமைத்து பயணிகளுக்குக் கொடுத்தனர். இது எனக்குச் சற்று ஆறுதலைக் கொடுத்தது.
பயணிகளின் வாக்குவாதத்தால் மனமுடைந்தேன்: இருப்பினும் ஒவ்வொரு முறையும் எங்களை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் பல பயணிகள் என்னிடத்தில் வாக்குவாதம் செய்தனர். ஆனால் எனக்குள் இருந்த சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையும்தான் அந்த சூழ்நிலையைச் சரியாக கையாள்வதற்கு உதவியது.
பொறுமைக்குக் கிடைத்த வெற்றி: ஒரு வழியாக பயணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை 3 மணி அளவில் அவர்களை வழியனுப்பி வைத்தோம். அப்போது என்னிடத்தில் வாக்குவாதம் செய்த பயணிகள் கூட எனக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றனர்.
இந்த சேவையைப் பாராட்டி எனக்கு 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்'விருது வழங்கும் ரயில்வே நிர்வாகத்திற்கு என நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது பொறுமைக்கு கிடைத்த பரிசாகத்தான் இதைப் பார்க்கிறேன்" என்கிறார் ஜாபர் அலி நெகிழ்ச்சியுடன்.