திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 39 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வரை கோயில்கள் புனரமைக்கவும், ஆன்மீக அன்பர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், அவரது தலைமையில் ஆலோசனைக் குழு கூட்டத்தைக் கூட்டி அதில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
அந்தக் குழுவின் முடிவின்படி, 24, 25ஆம் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு துவங்கியது. இதற்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று துவங்கிய மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மட்டும் 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் 4 நீதியரசர்கள் உள்பட அனைத்து ஆதீனங்களும் கலந்து கொண்டனர். முன்னணியில் இருக்கின்ற ஆன்றோர்கள், சான்றோர்கள், தமிழ் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உட்பட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பழனியைச் சுற்றிலும் அரோகரா கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நாங்கள் திட்டமிட்டது 25 ஆயிரம் பேர் மட்டும் தான். ஆனால், நேற்றைய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு, தமிழக முதலமைச்சர் முருகனுக்கு எடுக்கின்ற இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டனர். 160 முருகன் தொடர்பான புகைப்படக் கண்காட்சி, 3D திரையரங்கம், VR கலையரங்கம், புத்தக கண்காட்சி ஆகியவற்றை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.
மாநாட்டிற்கு வந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நேற்று ஒருநாள் மட்டும் 1.15 லட்சம் பக்தர்கள் உணவு அருந்தி உள்ளனர். இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சான்றோர்கள், ஆதினங்கள், நீதி அரசர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இரண்டாவது நாள் மாநாடும் வெற்றி பெறும். கண்காட்சியைப் பொறுத்தவரை, பொதுமக்கள் பார்வையிட மேலும் ஐந்து நாட்கள் நீட்டிக்கப்படுகிறது” என்றார்.
முன்னதாக, மத அடிப்படையிலான நிகழ்ச்சிகள் நடத்துவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “எல்லோருக்கும் எல்லாம் என்பது இந்த அரசு. நிறைவாக அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கும்போது, எங்கோ ஒரு மூலையில் இருந்ததை கேள்வியாக கேட்பது மகிழ்ச்சியை தவிர்ப்பதாகும்.
இந்த முருகன் மாநாட்டைப் பொறுத்தவரை, தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை இணைந்து நடத்துகின்ற நிகழ்ச்சி, முருக பக்தர்களால் கொண்டாடப்பட கூடிய நிகழ்ச்சி. இந்த மாநாட்டில் 16 முருக பக்தர்களுக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சார்பற்ற, அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் சேர்ந்து நடத்துகின்ற நிகழ்ச்சி” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 234 அரசாணையை முழுமையாக ரத்து செய்க.. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் அறிவிப்பு! - primary school teachers strike