ஹைதராபாத்: பானிபூரி என்றாலே பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இதுமட்டும் அல்லாது, இதில் உள்ள காரம் மற்றும் இனிப்பு சுவை நமக்கு ஒருவித உற்சாகத்தை அளிக்கக்கூடிய சிற்றுண்டியாக இந்த பானிபூரியை மாற்றுகிறது.
ஆனால், கர்நாடகாவில் உள்ள பானிபூரி கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் பானிபூரியில் கலப்பது கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பானிபூரி கடைகளில் மிகத்தீவிரமாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதனால் பானிபூரி பிரியர்கள் கடைகளுக்குச் சென்று பானிபூரியை சாப்பிட அஞ்சுகின்றனர்.
பலரும் விரும்பி சாப்பிடும், இந்த பானிபூரியை எவ்வித ரசாயனமும் சேர்க்காமல் வீட்டிலேயே செய்வது எப்படி? அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பது குறித்து அறிந்துகொள்வோம்
பூரிக்குத் தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – ஒரு கப்
- ரவை – 50 கிராம்
- உப்பு, தண்ணீர் மற்றும் எண்ணெய் – தேவையான அளவு
பூரி செய்முறை: பானிபூரிக்குத் தேவையான பூரி செய்வதற்கு மைதா மாவு, ரவை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக மாவை பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக(எலுமிச்சை பழம் அளவிற்கு) உருட்டிக்கொண்டு, உருட்டிய மாவை சப்பாத்தி கல்லில் போட்டு தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்த பூரியை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். பொரிக்கும் போது எண்ணெய்யை கரண்டி வைத்து பூரி மீது உற்றிடவும். அவ்வளவுதான் புசுபுசுனு பூரி தயார்.
உருளைக்கிழங்கு மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 2
- சீரக தூள் – 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- சாட் மசாலா(Chaat masala) - 1 ஸ்பூன் (விருப்பத்திற்கேற்றது)
- உப்பு – தேவையான அளவு
உருளைக்கிழங்கு மசாலா செய்முறை: உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோலை நீக்கி ஓரளவுக்கு மசித்து வைத்து கொள்ளவேண்டும். அதனுடன் சீரகத்தூள், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அவற்றையும் நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும். பானிபூரிக்குத் தேவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.
பானிக்கு (ரசம்) தேவையான பொருட்கள்:
- புதினா - 1/2 கட்டு
- கொத்தமல்லித் தழை - 1/2 கட்டு
- பச்சைமிளகாய் – 4
- வெல்லம் 50 கிராம்
- புளி 50 கிராம்
- சீரகத் தூள் – 1/2 டேபில் ஸ்புன்
- உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு
பானி (ரசம்) செய்முறை: புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதனனுடன் வெல்லம், புதினா, கொத்தமல்லித் தழை, பச்சைமிளகாய், சீரகத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சுவைக்கு ஏற்றவாறு சாட் மசாலா சேர்த்து கொள்ளவும். அவ்வளவு தான் பானிபூரிக்கு உயிர்கொடுக்கும் பானி (ரசம்) தயார்.
அப்புறம் என்ன? தயார் செய்துவைத்துள்ள பூரியில் சிறிய ஓட்டையை போட்டு, அதனுள் சிறிதளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பானியை (ரசம்) ஊற்றிக் கொடுத்தால் அனைவருக்கும் பிடித்த பானிபூரி தயார்.
இதையும் படிங்க: குளிர்சாதன பெட்டியில் வைக்கும் தக்காளி நீண்ட நாள் கெட்டுப்போகமல் இருக்க: இதை ட்ரை பண்ணுங்க.!