சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்.8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது.
இதனையடுத்து, இன்று (மே 10) காலை 9.30 மணியளவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், மதிப்பெண்ணில் சந்தேகம் உள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் கூறியுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பத்தாம் வகுப்பு ஏப்ரல் 2024 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலம் 13ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் https://dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பத்தாம் விடைத்தாள் நகல் விண்ணப்பம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரும் மாணவர்கள் முதலில் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்து பெற்ற விடைத்தாள் நகலை மாணவர்கள் ஆய்வு செய்து, பின்னர் அரசுத் தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் (scan copy) விண்ணப்பம் செய்பவர்கள் மட்டுமே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகலை ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே விடைத்தாள் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 ஆண்டு சட்டப்படிப்பு.. இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்!