சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 1ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கு 3,302 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இத்தேர்விற்கு 7 லட்சத்து 72 ஆயிரத்து 363 பள்ளி மாணவர்கள் மற்றும் 8 ஆயிரத்து 191 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரத்து 554 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 ஆயிரத்து 820 பள்ளி மாணவர்கள் மற்றும் 876 தனித்தேர்வர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 696 பேர் இன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வினை எழுத வரவில்லை என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வின்போது முறைகேட்டில் ஈடுப்பட்டதாக 3 மாணவர்கள் பிடிப்பட்டுள்ளதாகவும், அரசுத் தேர்வுத்துறை தெரிவித்தது. இந்நிலையில், ஆங்கிலத் தேர்விற்கான வினாத்தாள் எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.