சென்னை: 2024 மக்களவைத் தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இதில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட 1,749 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் இன்று மட்டும் 1,403 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 73 பேரும், அதற்கு அடுத்தபடியாக வடசென்னையில் 67 பேரும், தொடர்ந்து தென் சென்னையில் 64 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேநேரம், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் 26 பேரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 27 பேரும் மற்றும் மயிலாடுதுறையில் 30 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து, நாளை தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - முழு விவரம்! - Property Value Of Annamalai