சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 1ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்நிலையில் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கு 3,302 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இத்தேர்விற்கு 7 லட்சத்து 53 ஆயிரத்து 364 பள்ளி மாணவர்கள் மற்றும் 9 ஆயிரத்து 507 தனித்தேர்வர்கள் என, மொத்தம் 7 லட்சத்து 63 ஆயிரத்து 364 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 ஆயிரத்து 139 பள்ளி மாணவர்கள் மற்றும் 1,436 தனித்தேர்வர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 575 பேர் இன்று நடைபெற்ற வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வினை எழுத வரவில்லை.
மேலும், தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் 7 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்றைய கணக்குப்பதிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், வேதியியல் தேர்வினை எழுதிய மாணவர்கள், 2 மதிப்பெண் வினாக்கள் சற்று சிந்தித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு வாரத்துக்கு இதான் ரூட்டு.. சென்னைவாசிகள் கவனத்திற்கு!