தேனி: தேனி மாவட்டம், சமதர்மபுரத்தில் பெருமாள் (42) என்பவர் முத்துக்குமரன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி, வீட்டில் குடியிருக்கும் பெருமாளிடம், முத்துக்குமரன் வீட்டு வாடகை கேட்டுள்ளார்.
அப்போது, பெருமாள் இரண்டு நாட்களில் தருகிறேன் எனக் கூறியதாகவும், ஆனால் குடிபோதையில் இருந்த வீட்டின் உரிமையாளர் முத்துக்குமரன் "வீட்டு வாடகை கொடுக்க முடியாத நீ எல்லாம் எதற்கு உயிரோடு இருக்கிறாய்?" எனக் கூறி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதன் காரணமாக, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், முத்துக்குமரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து பெருமாளின் தலை மற்றும் கை, கால்கள் என உடலின் பல்வேறு இடங்களில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால் பெருமாள் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, பெருமாள் மீது தாக்குதல் நடத்திய முத்துக்குமரனை கைது செய்த தேனி நகர் காவல் துறையினர், இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: கோயிலுக்குள் அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பூசாரி.. தேனியில் பரபரப்பு!
இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (செப்.26) வழக்கு விசாரணை முடிவுற்று, முத்துக்குமரன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு, கொலை செய்யும் நோக்கோடு கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முத்துக்குமரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், விதிக்கப்பட்ட அபராதத் தொகை 2 ஆயிரம் ரூபாயை கட்டத் தவறினால், மேலும் இரண்டு மாத மெய் காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தேனி கூடுதல் முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.கோபிநாதன் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஆயுள் தண்டனை பெற்ற முத்துக்குமரனை, மதுரை மத்திய சிறையில் அடைக்க, நீதிமன்றத்தில் இருந்து காவல்துறையினர் தங்களது வாகனத்தில் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.