ஈரோடு: ஈரோட்டில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனம், ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக ஈரோடு மாநகராட்சியின் திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர், பெருமாள் மலையின் பின்பகுதியில் சுமார் 24 வீடுகள் கட்டி இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அங்கு 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நிறுவத்தின் உரிமையாளரை அணுகிய போது, வீடுகளை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறியதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்துக் குடியிருப்புவாசிகள் கூறுகையில் "கடந்த 2019ஆம் ஆண்டு ஆதி பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்திடம் வீடுகளை வாங்கினோம்.
அப்போது எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் செய்து கொடுப்பதாகத் தெரிவித்தனர். இந்த பகுதியில் மொத்தம் 24 குடும்பங்கள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஆனால் எங்களுக்குத் தேவையான குடிநீர், தெருவிளக்கு வசதி, சாக்கடை உள்ளிட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
வீடுகளும் தரமான முறையில் கட்டப்படவில்லை, இது தொடர்பாக வீடுகளை விற்பனை செய்த நிறுவனத்திடம் கேட்ட போது, இதனை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் சென்று முறையிட்டோம். அப்போது விட்டு வரி உள்ளிட்டவற்றைச் செலுத்தச் சொன்னார்கள்.
பின்னர் இது தொடர்பாக அதிகாரிகள் இடத்தில் பல முறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் வெளியேற உரிய சாக்கடை வசதிகள் இல்லாததால், 20 அடி ஆழத்திற்குக் குழி தோண்டப்பட்டு, அந்த குழியில் சாக்கடை நீரை வெளியேற்றி வருகின்றோம்.
இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் தெரு விளக்கு வசதியும் இல்லாத காரணத்தால், இந்த கழிவுநீர் குழிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை வசதி ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: நாளை முதல் பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்!