தருமபுரி: கர்நாடக - கேரள மாநிலங்களில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக காவிரி படுகையில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழுக் கொள்ளளவை எட்டியது.
இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று காலை வினாடிக்கு 24,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பகல் நிலவரப்படி நீா்வரத்து 1 லட்சத்து 28ஆயிரம் கன அடியாக உள்ளது.
நீா்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 16வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை நீட்டித்துள்ளது. அதிகப்படியான வெள்ளம் வரும் என்பதால், காவிரி கரையோரப் பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் பகுதியில் அரசுப் பள்ளி, தனியார் மண்டபம் என பொதுமக்கள் தங்குவதற்கு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும், தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கான நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், நேற்று திறக்கப்பட்ட 2.40 லட்சம் கன அடி தண்ணீரும் இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்