சென்னை: ஒவ்வொரு வருடமும் மே 2வது வார ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மே மாத 2வது ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 12) உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த அன்னையர் தினம் முதன் முதலில், அன்னா ஜார்விஸால் என்பவரால் 1908ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு அமெரிக்காவில் மே மாத இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுவதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பு ரோமானியர்களும், கிரேக்கர்களும் இதே போல ஒரு கொண்டாட்டத்தை மேற்கொண்டு இருந்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் அன்னையர்களுக்கு என்று தனியாக கொண்டாடியதில்லை. நம் நாட்டில் இருப்பதைப் போல அந்த நாட்டிலும் குறு தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் என இவர்கள் வழிபட்டிருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களை முக்கியமாக வைத்து பல விழாக்களைக் கொண்டாடி இருக்கின்றனர்.
ரியா மற்றும் பைசல் என்ற பெண் தெய்வங்களை மையப்படுத்தி, அந்த பெண் தெய்வத்தை தாயைப்போல நினைத்து விழாக்கள் நடத்தியிருக்கின்றனர். ஆனால், இதற்கென்று தனியாக எந்த நாளும் அதிகாரப்பூர்வமாக இவர்கள் நிறுவியதில்லை. ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக இருக்கக்கூடிய கிறிஸ்தவ மதத்தவர்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்குச் செல்வது வழக்கம், அதிலும் இந்த அன்னையர் தினமானது ஈஸ்டர் முடிந்த நான்காவது ஞாயிற்றுக்கிழமை இவர்கள் கொண்டாடி இருந்திருக்கின்றனர்.
ஆனால் இந்த கொண்டாட்டம் ஒரு மதச்சார்பாகவே இருந்திருக்கின்றது. பின்னர் 1940-க்கு பின்னர் இந்த விழா ஒரு மதச்சார்பற்ற விழாவாக மாறி பொதுவாக அனைவரும் தங்களின் தாயை கொண்டாட ஆரம்பித்தனர். இந்த நாளுக்கு விடுமுறையும் அளித்திருக்கின்றனர். இந்த மாற்றமானது அமெரிக்காவில்தான் முதலில் ஏற்பட்டது.
19ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் ஆங்காங்கே போர் நடைபெற்றுகொண்டிருந்த காலத்தில் பல நாட்டு வீரர்களும் அதற்கு பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் மேற்கு வெர்ஜீனியாவை சேர்ந்த ரீவ்ஸ் ஜார்விஸ் என்பவர் அங்கிருக்கும் பெண்கள் அனைவருக்கும் தங்களது குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எப்படி பராமரிப்பது போன்றவைகளை கற்றுத்தருவதற்கு ஒரு அமைப்பை ஆரம்பித்தார்.
1868ஆம் ஆண்டு அன்னையர் நட்பு தினம் என்று ஒரு தினத்தை அறிவிக்கின்றனர். இதன் மூலமாக மேற்கு வெர்ஜீனியாவில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடினர். பின்னர், 1870-ல் ஜூலியா வார்டு ஹோவே என்பவர் அன்னையர் தினத்தை குறித்து ஒரு பிரகடனத்தை எழுதினார். அதில் இந்த தினத்தை எதற்காக கொண்டாடுகிறோம், எப்படியெல்லாம் இந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்று அதில் விரிவாக எழுதுகிறார்.
ஜூன் 2ஆம் தேதி ‘அன்னையின் அமைதி தினம்’ என்ற தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று ஜூலியா வார்டு ஹோவே அறிவித்திருந்தார். பின்னர் ரீவ்ஸ் ஜார்விஸ்-இன் மகள் அன்னா ஜார்விஸ் 1900ஆம் ஆண்டு இந்த தினத்தை அதிகாரப்பூர்வமாக மாற்றுகிறார். 1905-இல் தன் அன்னையின் இறப்பிற்கு பிறகு இந்த தினத்தை தன் அம்மாவிற்கு நன்றி சொல்லும் விதமாகவும், அவரின் சேவையை பாராட்டும் விதமாகவும், அவரின் நினைவிற்காகவும் இந்த தினத்தை கொண்டாட நினைத்தார்.
பின்னர், 1908ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வெர்ஜீனியாவில் கிராப்டன் என்னும் இடத்தில் உள்ள மெதட்டிஸ் தேவாலயத்தில் இந்த தினத்தை கொண்டாடினார். இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருந்திருக்கின்றனர். இது தான் முதன்முதலில் நடத்தப்பட்ட அன்னையர் தினமாகும். இந்த விழாவிற்கு பின்னர், அன்னா ஜார்விஸ் அமெரிக்காவில் அனுசரிக்கப்படும் விடுமுறைகளை கவனிக்கிறார்.
இவை ஆண்களின் சாதனையை மையப்படுத்தியே இந்த விடுமுறைகள் அனுசரிக்கப்படுகிறது என்றும், பெண்களுக்கென்று எந்த விடுமுறையும் இல்லை தனியாக விடுமுறை வேண்டும் என்றும், அமெரிக்க அரசிடம் வாதிடுகிறார். பின்னர் அனைத்து தேவாலயங்களில் இருப்பவர்களும் இதற்கு அனுமதியளித்தனர்.
அதன் பின்னர் மே மாதம் இரண்டாம் வாரம் ஞாயிறுக்கிழமை எந்த தேதியாக இருந்தாலும் அன்னையர் தினமாக கொண்டாடவும் அந்த நாள் விடுமுறை நாளாகவும் இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் உட்ரோ வில்சன் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் மே இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க: ஸ்டாலின் முதல் விஜய் வரை சர்வதேச அன்னையர் தினம் வாழ்த்து! - Mothers Day 2024