மதுரை: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் அருகே உள்ள மலம்பட்டி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாகப் பள்ளிவாசல் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு மேலூர் பகுதி இந்து சமுதாய பொதுமக்கள் வெள்ளநாதன்பட்டி, பொன்மலை நகர், நாகம்மாள்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்து குர்ஆன் புத்தகம், ஆப்பிள், திராட்சை, பேரீச்சம்பழம், கற்கண்டு உள்ளிட்ட பொருட்களைப் பள்ளிவாசலுக்குச் சீர்வரிசையாக வழங்கினர்.
இதுபோன்று இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் சமூக வேற்றுமை மறந்து ஒற்றுமையாகத் தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்து வருவதாகவும், இதே போன்ற ஒரு நிலைமை இந்தியா முழுவதும் தொடர வேண்டும் எனவும் சீர்வரிசை கொண்டு வந்த ஹரிஹரன் என்பவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தளத்தில், "மேலூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஜம்ஜம் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வுக்கு இந்து சமூக மக்களின் சீர்வரிசைகள் வந்து பள்ளித் தளத்தை அலங்கரித்தன. மதங்களைக் கடந்து மனிதநேயத்தைத் தாங்கிப் பிடிப்பது தான் மதம் சார்ந்த சிந்தனையின் அடையாளம். அதுவே மேலூரும், மதுரையும், தமிழ்நாடும் தேசத்துக்குச் சொல்லும் செய்தி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2024.. மதுரைக்கென 20 திட்டங்கள்.. தொழில்துறையினர் கருத்து என்ன?