திருநெல்வேலி: உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. அன்றைய தினம், காதலர்கள் பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்களை வழங்கி தங்கள் காதலை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்துவர். அதேநேரம் காதலர் தினத்தால் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாழ்க்கையை சீரழிப்பதாகக் கூறி, இந்து அமைப்புகள் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அன்றைய தினம் இந்த அமைப்புகள் சார்பில் பல்வேறு நூதன போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், பிப்ரவரி 14 காதலர் தினமான இன்று, நெல்லை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் காதலர் தினத்தை எதிர்க்கும் விதமாக, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் சார்பில், பாடை கட்டும் நூதனப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் உடையார் இல்லம் அருகில் இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கே மாநகரப் போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், திட்டமிட்டபடி இந்து மக்கள் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளர்கள் கார்த்தீசன் தலைமையில் நிர்வாகிகள், காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில், தென்னை ஓலையில் பாடை கட்டி, அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு எடுத்துச் செல்லத் தயாராகினர்.
இதற்காக கம்புகள் மற்றும் தென்னை ஓலைகளை எடுத்து பாடை கட்ட தயாரானபோது, அங்கிருந்த போலீசார் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது என்று கூறி, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தொடர்ந்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் அனைவரும் கோஷம் எழுப்பினர்.
இதுமட்டுமல்லாது, 'நல்ல காதலை ஆதரிக்கிறோம்; கள்ளக்காதலை எதிர்க்கிறோம்' என்று கோஷங்களை முழங்கினர். மேலும், இதய வடிவில் உள்ள பலூன்களை ஊதி, அவற்றை உடைத்து, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதியும் படிங்க: சீயான் 62; முதல் முறையாக விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா!