தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலை ஊராட்சியில் 63 மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் சித்தேரி மலை இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மலைக்கு மறுபுறத்தில் இருந்து வருகிறது.
இந்த மலைக் கிராமத்திற்குச் சித்தேரியில் இருந்து செல்ல வேண்டும் என்றால், மலையேறி நடந்து மட்டுமே செல்ல வேண்டும். மேலும், அத்தியாவசிய தேவைகளுக்குச் சென்று வர வாச்சாத்தி வழியாக கோபிநாதம்பட்டி கூட்ரோடு சென்று வருகின்றனர். இதில் வாச்சாத்தி வரை இந்த மலைக் கிராமங்களுக்குச் செல்வதற்குச் சாலை வசதி இருக்கிறது.
ஆனால் வாச்சாத்தி முதல் மலை மீதுள்ள அரசநத்தம், கலசப்பாடி உள்ள கிராமங்களுக்குச் செல்வதற்கு முற்றிலுமாக சாலை வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் தார்ச் சாலை அமைத்துக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இருந்தாலும் இதற்காக, வனத்துறையினருக்கு சுமார் 2 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. மேலும், 7 கிலோமீட்டர் தூரத்தில் 5 கிலோ மீட்டர் வனப்பகுதியில் சாலை அமைப்பதற்கு, ஒன்பது கோடி ரூபாய்க்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, பழங்குடியின நலத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இன்றுவரை இந்த கிராமங்களுக்குச் சாலை அமைப்பதற்கும், வனத்துறையினருக்குக் கொடுக்க வேண்டிய பணம் மற்றும் சாலை அமைப்பதற்கான நிதியைப் பழங்குடியினர் நலத்துறை இன்னும் வழங்காமல் இருந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் சாலை வசதி அமைத்துத் தரப்படாமல் இருப்பதால் பள்ளிக்குச் செல்லுகின்ற மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் நீண்ட நாட்களாக இந்த மலைக் கிராம மக்களுக்குச் சாலை வசதி அமைத்துத் தர வேண்டி வலியுறுத்தி வந்த நிலையில், நிதி ஒதுக்கப்படாமல் இருப்பதால் இன்று (ஜன.29) அரசனந்ததம், கலசப்பாடி உள்ளிட்ட மலை மீது உள்ள கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சேலம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அரூர்-சேலம் பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்வதை அறிந்த அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன், வருவாய்த் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கலைத்தனர்.
இதையும் படிங்க: எப்படி வந்து சிக்கியிருக்கேனு பாத்தியா?.. கூகுள் மேப் உதவியால் படிக்கட்டுகள் நடுவே சிக்கிய கார்!