நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்த ரயில் நேற்று (பிப்.26) உதகை ரயில் நிலையம் அருகே உள்ள பெர்ன் ஹில் (Fern Hill) பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வளர்ப்பு எருமை மீது மோதியதில் ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது.
நல்வாய்ப்பாக ரயிலில் பயணம் மேற்கொண்ட 220 ரயில் பயணங்களும் உயிர் தப்பினர். இதையடுத்து, இந்த சம்பவம் காரணமாக, உதகைக்கு வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அனைத்தும் கிரேன் எந்திரம் மூலம் தண்டவாளத்தில் ஏற்றும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று (பிப்.27) உதகைக்கு வழக்கம் போல மலை ரயில் போக்குவரத்து சேவை தொடங்கியது.
தற்போது, கோடைக் காலம் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி, வெளி மாநில மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர். அந்த வகையில், இவர்கள் இன்று மீண்டும் தொடங்கிய மலை ரயிலில் பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், தற்போது உதகை, குன்னூர், வெல்லிங்டன் மற்றும் அருவங்காடு போன்ற ரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகள் நிறைவடையும் தறுவாயில் புதுப்பொலிவுடன் ரயில் நிலையங்கள் காட்சியளிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான கழிவறை வசதி, குடிநீர், ஓய்வு அறைகள், உணவு விடுதி போன்ற வசதிகள் சிறந்த முறையில் அமைத்துத் தர உள்ளதாகவும், அனைத்து ரயில் நிலையங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு, அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலின் பாரம்பரியத்தை உணர்த்தும் முகமாக, பழமையான புகைப்படங்கள் மற்றும் ரயில் தளவாடப் பொருட்கள் காட்சிப் படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், நீலகிரி மலை ரயிலின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள இந்த அருங்காட்சியகங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளுக்கு பிறகு சாதாரண ரயில்களின் கட்டணம் குறைப்பு.. பயணிகள் உற்சாகம்..