ஈரோடு: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடானது விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு மற்றும் விளம்பர பணிகளை தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், லட்சுமி நகர்ப் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் தவெக-வினர் மாநாடு குறித்த சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலத்தில் வரையப்பட்ட சுவர் விளம்பரத்தினை இன்று (அக்.12) தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெள்ளை நிற வர்ணம் பூசி மறைத்தனர்.
இதையும் படிங்க: கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி: 18 ரயில்களின் சேவை ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வரையப்பட்ட சுவர் விளம்பரத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரியப்படுத்தாமலேயே வர்ணம் பூசி மறைத்த சம்பவம் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வர்ணம் பூசும் தகவல் அறிந்து வந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அரசியல் கட்சி விளம்பரங்கள் நெடுஞ்சாலை சொந்தமான இடத்தில் வரையக்கூடாது என தெரிவித்துள்ளனர். அப்போது, தாவெக நிர்வாகிகள், மற்ற அரசியல் கட்சியினர் வரைந்தால் அனுமதிக்கிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் அதிகாரிகள் தமிழக வெற்றி கழகத்தின் விளம்பரத்தினை வர்ணம் பூசி மறைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்