சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஜூலை 22) தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த ஆண்டு மொத்தம் 433 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 91 இடங்கள் உள்ளன. அதில், 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
சிறப்புப் பிரிவினர்களாக உள்ள மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வும், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வும் இன்று தொடங்குகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 664 இடங்களில் சேர்வதற்கு 111 பேர் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் பொதுப்பிரிவில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 38 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 11 பேரும் இன்று கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 167 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கான இரண்டு சதவீத இடங்களில் 3,596 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 8 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 3 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முதலில் குறைவாக இருந்தது. தற்போது தமிழக அரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் பூஜ்ஜிய தேர்வு சதவிகிதம் கொண்ட கல்லூரிகள் தொடர்ந்து அப்படிச் செயல்படுவதாக புகார் வருமானால் அதைப்பற்றி ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்படும். ஆன்லைனில் கலந்தாய்வு இல்லாமல் ஒற்றைச் சாளர முறையில் நேரடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது குறித்து வரும் ஆண்டில் பரிசீலிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அனைவருக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
விளையாட்டு பிரிவில் சேர்வதற்கு அதிக மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார்கள் இதனைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு முதலமைச்சரிடம் பேசி, பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 இடங்களை அடுத்தாண்டு முதல் 2 சதவீதமாக அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும். பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை இணையதளங்களில் வெளியிடுவது போல் தன்னாட்சி பெற்ற கல்லூரி முடிவுகளையும் அடுத்த ஆண்டு முதல் இணையதளங்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் 50 ஆயிரமாக உயர்த்தப்படுவதற்கான நடவடிக்கை அரசின் நிதிநிலையைப் பொறுத்து மேற்கொள்ளப்படும்.
பொறியியல் துறைகளுக்கு கல்விக் கட்டணம் கடந்த ஆண்டில் இருந்த கட்டணம் தான் இருக்கும். பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு கல்விக் கட்டணம் உயராது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி துவங்க உள்ளது" என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'சாதியற்ற கிறிஸ்தவர்' சான்று கொடுங்க.. செல்போன் டவர் மீது ஏறி ஆர்பிஎப் காவலர் ஆர்ப்பாட்டம்.. அரக்கோணத்தில் பரபரப்பு!