சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 44 வது பட்டமளிப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கிண்டி பொறியியல் கல்லூரியின் விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார்.
இந்த விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். "முக்கிய பணிகள் காரணமாக அமைச்சரால் விழாவில் கலந்துக்கொள்ள முடியவில்லை" என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டமளிப்பு விழாவின் மூலம் 932 பேர் நேரடியாகவும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 959 மாணவர்கள் கல்லூரி மூலமாகவும் பட்டம் பெற்றுள்ளனர்.
பின்னர், பட்டமளிப்பு விழாவில் வரவேற்புரை ஆற்றி பேசிய துணைவேந்தர் வேல்ராஜ், “முக்கிய பணிகள் காரணமாக விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் கலந்து கொள்ள இயலவில்லை. QS உலக (QS World) பல்கலைக்கழக தரவரிசையில், அண்ணா பல்கலைக்கழகம் உலகில் 383 வது இடத்தையும், இந்தியப் பல்கலைக்கழகங்களில் 10 வது இடத்தையும் பெற்றுள்ளது.
டைம்ஸ் உயர் கல்வி (THE-Times Higher Education), உலக பல்கலைக்கழக தரவரிசை (WUR- World University Ranking) படி, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் பிரிவில் உலகளாவிய நிறுவனங்களில் 301-400 குழுவில் இடம் பெற்றுள்ளது. NIRF தரவரிசை 2023 இல், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்வி நிறுவனங்களில் 13 இடத்திலும், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 14 ஆவது இடத்திலும் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் மூன்றாவது சுழற்சியில் A++ தரத்துடன் NAAC -ல் அங்கீகாரம் பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, விழாவில் சிறப்புரை வழங்கிய தேசிய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் சீதாராம், “தேசிய கல்விக்கொள்கை 2020 உருவாக்கப்பட்டதன் நோக்கம், உயர்க்கல்வியில் மாணவர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்பதுதான். நாட்டில் 26.5 கோடி மாணவர்கள் பள்ளிக்கல்வியை படிக்கின்றனர். ஆனால், 4.3 கோடி மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சேருகின்றனர்.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை: 2022-23 ஆண்டில் தமிழகத்தில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து (GER) 47 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 50 சதவீதத்தை கடந்துள்ளது. இந்தியாவில் தமிழகம் உயர்க்கல்வியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் சிறந்து விளங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ( AI ): செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI) முன்னேற்றங்கள் நம்பமுடியாத அளவில் உள்ளது. வருங்காலத்தில் AI செய்யும் வேலைகளால், சமூகத்தில் அவற்றின் தாக்கம் பற்றிய கவலைகளையும் எழுப்புகின்றன. இயந்திரங்கள் மற்றும் AI அமைப்புகள் மிகவும் நுட்பமானதாக இருப்பதால், சில துறைகளில் வேலைப் பாதுகாப்பு குறித்த நிச்சயமற்றதன்மை உள்ளது. AI தொழில்நுட்பம், தொழிலாளர் மற்றும் வேலைகளின் தன்மையை மறுவடிவமைக்கிறது. பட்டதாரிகள் இந்த மாற்றங்களுக்கேற்ப தயாராக இருக்க வேண்டும்.
உதவித்தொகை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், உயர்க்கல்வியில் பாடங்களை 13 மாநில மாெழிகளில் மாெழிப் பெயர்த்துள்ளது. இதனால், மாணவர்கள் பொறியியல் படிப்பில் தங்களுக்கு உரிய பாடத்தினை கட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். உயர்க்கல்வியில் பெண்கள் அதிகளவில் படிக்கும் வகையில் மத்திய அரசு உதவித்தொகையையும் வழங்கி வருகிறது.
அனுவாதினி: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் உருவாக்கிய அனுவாதினி என்பது, தொழில்நுட்பக் கல்வியில் மொழித் தடைகளைத் தகர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்புக் கருவியாகும். இது தொழில்நுட்ப ஆவணங்கள், கல்விசார் தகவல்களை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உதவுகிறது. ஆங்கிலத்தில் புலமை இல்லாத இளம் பட்டதாரிகள், தங்கள் தாய்மொழிகளில் கல்விப் கற்பதை உறுதிசெய்கிறது” என்று சீதாராம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அருந்ததிராய் துவங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை.. நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் காரசார பேச்சு!