மதுரை: கரூர் மாவட்டம், தாந்தோணி மலையைச் சேர்ந்த ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம், வெள்ளியணை, கீழவெளியூர் உள்ளிட்ட 8 இடங்களில் டாஸ்மாக் கடைகளோடு பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பார்களை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், தற்போது வரை அவை இயங்கி வருகின்றன. கரூரில் முறையான உரிமம் இன்றி இயங்கும் பார்களால் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி வேறு சில பார்களும் உரிமம் இன்றி இயங்கி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இவை தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் அது பரிசீலிக்கப்படவில்லை. ஆகவே கரூர் மாவட்டத்தில் உரிய உரிமம் இன்றி இயங்கும் பார்களை மூட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோரின் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "8 பார்களும் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன" எனத் தெரிவித்தார். அதையடுத்து, பேசிய நீதிபதிகள், "8 பார்களும் எந்த தேதியில் மூடப்பட்டன? என்பது தொடர்பான விவரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கரூர் ஆட்சியருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கை ஜூலை மாதத்திற்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தேசிய அளவில் நீட் தேர்வு ரத்து செய்யுங்கள் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!