மதுரை: திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்துராஜ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழா. சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைகளை நடத்த வெடிபொருள் விதிகளை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளான கல்லூரி, பள்ளி, மருத்துவமனைகள் போன்றவற்றிலிருந்து 50 மீட்டர் தொலைவில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கக்கூடாது என்பது விதியாகும். தீ பற்றாத வகையில் பட்டாசு கடைகளில் மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் இடையே மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை!
எதிர் எதிரில் பட்டாசு கடைகள் அமைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பு உறுதி செய்ய வேண்டும். ஆனால், திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தாமல் உரிமம் வழங்கியுள்ளார். தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் வெடிபொருள் விதிகளை முறையாக பின்பற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.
எனவே, திருச்சியில் சூப்பர் மார்க்கெட்டுகள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகள், கோயில் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் அருகே தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ஆணையர், திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.