சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய குற்றவாளிகள், போதைப் பொருள் மற்றும் தமிழக அரசின் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் குற்றவாளிகளை இனம் கண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகள் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் அடைக்கப்படும் குற்றவாளிகள் அரசின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கூடிய சென்னையில் உள்ள அறிவுரை கழகத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அங்கு விசாரணையில் குண்டர் சட்ட உத்தரவு சரி எனில், தொடர்ந்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். அரசின் கைது உத்தரவு தவறானது என்றால் உடனடியாக குண்டர் சட்டத்தில் இருந்து கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். குண்டர் சட்ட பயன்பாட்டை பொருத்தவரை தமிழகத்தில் 51 சதவீதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை அறிவுரைக் கழகத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தென் மாவட்ட கைதிகளை சென்னைக்கு அழைத்து சென்று வருவதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் இருந்து சென்னை அறிவுரைக் கழகத்தில் மனு தாக்கல் செய்வதால் அதிக அளவில் வழக்குகள் தேங்கி கிடக்கின்றது.
எனவே, தமிழகத்தில் தென் மாவட்டங்களில் உள்ள வழக்குகளை விசாரணை செய்ய மதுரையில் ஒரு அறிவுரை கழகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, 2 மாதத்தில் மதுரையில் அறிவுரை கழகத்தை அமைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கல்பாக்கம் ஈனுலையில் விரைவில் மின் உற்பத்தி! மத்திய அரசு போடும் கணக்கு என்ன?