சென்னை/திருநெல்வேலி/வேலூர்: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் இன்று சென்னை நோக்கி வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சென்னை புறநகரான தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நேரிட்டுள்ளது.
சென்னையில் பணிபுரிபவர்கள், சென்னையில் தங்கி படிப்பவர்கள் மற்றும் தங்கள் சொந்த ஊர்களில் விடுமுறையை கழிக்க என சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். விடுமுறை முடிந்து நாளை பள்ளி, கல்லுரி, அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் இன்று மாலையில் இருந்து மீண்டும் சென்னையை நோக்கி படையெடுத்து உள்ளனர். இந்தநிலையில் சொந்த ஊர் சென்றவர்களின் வசதிக்காக இயக்கப்படும் அரசு பேருந்துகளிலும், தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் லட்சக்கணக்கானோர் சென்னையை நோக்கி வருவதால் சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடி, வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தற்போது பெருங்களத்தூர், வண்டலூர் கிளாம்பாக்கம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் வரை அரசு பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதையடுத்து தாம்பரம் பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர்.
மேலும் தென் மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து பொதுமக்கள் சென்னையை நோக்கி வருவதால், இரவு வரை போக்குவரத்து நெரிசல் நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலை, தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.மேலும் ரயில்கள் மூலமாகவும் அதிகப்படியான பொதுமக்கள் சென்னையை நோக்கி வருவதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் புறநகர் பேருந்துகளுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் அடுத்தடுத்த இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு-சென்னை திருவொற்றியூரில் சோகம்!
வேலூர் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்: இதே போல் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பொதுமக்கள், நான்கு நாள் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
வேலூரில் இருந்து சென்னை, ஓசூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், காஞ்சிபுரம், கும்பகோணம், சேலம், பாண்டிச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து துறை சார்பாக 148 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்து நிலையத்தில் குவிந்ததால், அமர்வதற்கு போதிய இருக்க இல்லாமல் நடைபாதையிலேயே அமர்ந்துள்ளனர்.
நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்: நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பணி செய்யும் இடங்களான சென்னை பெங்களூர் கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணத்தை மேற்கொண்டனர் இந்த நிலையில் பண்டிகை முடிவு பெற்று மீண்டும் பணிகளுக்கு திரும்பும் பொதுமக்கள் பேருந்து ரயில் உள்ளிட்டவைகள் மூலம் பயணங்களை தொடர்ந்து வருகின்றனர். நெல்லையில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் கூட்டம் ரயில் நிலையத்தில் இரண்டாவது நாளாக அலைமோதியது.முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட அந்தியோதயா ரயிலில் இடம்பிடிக்க முண்டியடித்த பொதுமக்கள் ரயிலில் கழிவறை பகுதி நடைபாதை பொருட்கள் வைக்கும் பகுதி என அனைத்து இடங்களிலும் நிரம்பி வழிந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்