கோவை: பிரதமர் மோடி வருகையையொட்டி, கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தைச் சுற்றிலும் மத்திய மற்றும் மாநில போலீசார் 500-க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாநிலங்களில் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் பிரதமர் மோடி ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
அதன்படி, கோவைக்கு இன்று மாலை விமானம் மூலம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, கோவை சாய்பாபா காலனி சந்திப்பில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பாஜக சார்பில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். பிரதமர் மோடியின் கோவை வருகையையொட்டி, விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து விமான நிலையத்திற்கு உள்ளே வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி செல்லும் பாதையில், மத்திய ரிசர்வ் படை மற்றும் தமிழ்நாடு போலீசார் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலைய வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 5 நிமிடத்துக்கு ஒருமுறை மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலையத்தை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை மற்றும் தமிழ்நாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, 100 மீட்டர் தொலைவுக்கு ஒரு காவலர் என்ற விகிதத்தில் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, பிரதமர் பயணிக்கும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர் முழுவதும் பிரதமரின் வருகைக்காக, சுமார் 4,500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் பதவிக்கே இழுக்கானவர்? ஆர்.என்.ரவி மீது திமுக எம்பி வில்சன் தாக்கு