சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, கோயம்புத்தூர்,நீலகிரி,தேனி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் 1 செ.மீ முதல் 7 செ.மீ வரை மழை பெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 39.0 ° செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.8 ° செல்சியஸ் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (புதன்கிழமை) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை (வியாழக்கிழமை) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்தாகவும், ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 31.07.2024 முதல் 04.08.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: 31.07.2024 மற்றும் 03.08.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 31.07.2024 04.08.2024 வரை: மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், கேரளா - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பவம்.. வயநாடு கொடூரத்தை விளக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!