தமிழ்நாடு: கடந்த மாதம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து, கத்திரி வெயில் காலம் முடியும் நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று கடுமையாக இருந்தது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டிய நிலையில், ஆம்பூர், மிட்டாளம், பைரப்பள்ளி, அரங்கல்துருகம், கதவாளம் ஆகிய கிராமப் பகுதிகளில் பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது.
மேலும், கடந்த சில தினங்களாக மிட்டாளம் பகுதியில் பெய்து வரும் கனமழையினால், மிட்டாளம் நெமிலியம்மன் கோயில் அருகே உள்ள கானாற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை காரணமாக அன்னூர் கோவன் குளம் முழு கொள்ளவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேறி வருகிறது.
உபரி நீர் செல்லும் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ளது. குறிப்பாக, அன்னூர் புவனேஸ்வரி நகர் மற்றும் பழனி கிருஷ்ணா நகர் அவென்யூ உள்ளிட்ட குடியிருப்புகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறையும் குளம் நிரம்பும் போதெல்லாம் மழைநீர் தேங்குவதாக இப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், கோயம்புத்தூர் - சத்தி சாலையில் உள்ள பாலத்தில் சிலர் மண்ணைக் கொட்டி அடைத்துள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் போனதாகவும், இதனால் இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல், வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென மேகங்கள் சூழ்ந்து வேலூர் மாநகர் முழுவதும் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக வேலூர், காட்பாடி, புதிய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி, விருபாட்சிபுரம், பாகாயம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே அசால்ட்டாக பைக்கை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்! - Bike Theft In Ambur