சென்னை: பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று (ஜன.31) விசாரணைக்கு வருகிறது.
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், அவரது மனைவி மெர்லின் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 25ஆம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட கணவன் மனைவி இருவரும், பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது குடும்ப உறுப்பினர் போல பணிப்பெண்ணையும் நடத்தியதாகவும், அவரை கல்லூரியில் சேர்த்து அதற்கான கட்டணத்தையும் தாங்களே செலுத்தியதாகவும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ-வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லின் தம்பதியினர் திருவான்மியூர் சவுத் அவன்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஆண்டு மே மாதம் வீட்டு வேலை செய்வதற்காக ரூ.16 ஆயிரம் மாத சம்பளம் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்த நிலையில், அவருக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜூலை மாதம் அப்பெண் பணி செய்ய விருப்பம் இல்லை எனவும், தான் சொந்த ஊருக்கே செல்வதாகவும் மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியினர், அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்ததாகவும், மேலும் அடித்து துன்புறுத்தி முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இதனால், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மருத்துவமனை மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டுதல், அடித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கடந்த 25ஆம் தேதி தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் ஆந்திராவில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது விபத்து.. கல்லூரி மாணவி பலி; இரு மாணவர்கள் மாயம்!