பெரம்பலூர்: தருமபுரியில் ஒரு கும்பல் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவதாகவும், அக்கும்பல் மொபைல் டீம் மூலம் செயல்படுவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில், சுகாதரத்துறை அதிகாரிகள் அவர்களை பிடிப்பதற்காக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அந்த கும்பல் கர்ப்பிணிகளை காரில் அழைத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது, கார் தருமபுரியில் இருந்து சேலத்தைக் கடந்து பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவரது கட்டிடத்தில் உள்ள மெடிக்கலுக்கு வந்துள்ளது.
அங்கு மெடிக்கல் மாடியில் கர்ப்பிணிகளை அழைத்துச் சென்ற கும்பல், அங்கு கையடக்க ஸ்கேன் மெஷின் மூலம் கருவில் இருக்கும் பாலினத்தைக் கண்டறியும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தருமபுரி சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தைச் சுற்றி வளைத்து, அங்கு பரிசோதனை செய்தவரையும், நான்கு கர்ப்பிணிகளையும் பிடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களிடன் விசாரணை நடத்தியதில், கடலூர் மாவட்டம், மங்களூர் அடுத்துள்ள கச்சிமைலூரைச் சேர்ந்த முருகன் என்பவர் பரிசோதனைக்கு ரூ.15 ஆயிரம் பெற்றுக் கொண்டு, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறியதும், அவர் எம்ஏ படித்துவிட்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து, கர்ப்பிணிகளை விசாரித்ததில், அவர்கள் நான்கு பேருக்கும் 2 பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறிய முருகனை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, தப்பியோடிய மூன்று ஏஜென்டுகளை தேடி வருகின்றனர். கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறிந்து ஏமாற்றியவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட நல வாரியம் இணை இயக்குநர் சாந்தி கூறுகையில், ”கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு வந்து விசாரணை செய்ததில், இதில் ஈடுபட்ட போலி மருத்துவரை கைது செய்துள்ளோம். இதனையடுத்து, அவரை போலீசிடம் ஒப்படைத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் இது போன்ற தவறான செயலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: விரைவில் திறப்பு விழா காணும் பட்டினப்பாக்கம் நவீன மீன் மார்க்கெட்.. சிறப்பம்சங்கள் என்ன?