மதுரை: மதுரையைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை அரசு ராசாசி மருத்துவமனை முதல்வர் கடந்த ஏப்.30ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மூத்த பேராசிரியர்கள் மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
மதுரை அரசு ராசாசி மருத்துவமனை தமிழகத்தில் இரண்டாவது பெரிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது. நாள்தோறும் 10 ஆயிரம் நோயாளிகளும், 3,000 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை கட்டுமானப் பணி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ மையம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வாகன போக்குவரத்து நிறுத்தம் வசதி, அறுவை சிகிச்சைகளில் தாமதம், அதிகளவிலான கூட்டம், சிகிச்சை அளிப்பதில் தாமதம், தரம் குறைந்த மருத்துவம், அவசரகால மருந்துகளை கொள்முதல் செய்வது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண நிரந்தர முதல்வரை பணியமர்த்துவது மிகவும் அவசியம்.
மதுரையில் மட்டுமின்றி தேனி, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதல்வர்கள் நியமிக்கப்படவில்லை. ஆகவே, தமிழகத்தில் மதுரை உட்பட காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சுகாதாரத்துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, “காலியாக உள்ள டீன் பதவிகளை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டது. முறையாக அனைத்து கல்லூரிகளுக்கும் விரைவில் முதல்வர் நியமனம் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுது நீதிபதிகள், ஏற்கனவே கல்லூரிகளுக்கான டீன் யார் என்று முடிவு செய்து வைத்திருப்பீர்கள். அதை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் செய்ய வேண்டாம். எனவே, விரைந்து காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான டீன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த நியமனங்களை நீதிமன்றம் கண்காணிக்கும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : அருப்புக்கோட்டை டிஎஸ்பி மீது ஆக்ரோஷ தாக்குதல்; ஒருவர் கைது - ஈபிஎஸ் கண்டனம்! - Attacking on Aruppukkottai DSP