கோயம்புத்தூர்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் தொடர்பான அறிகுறி இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் உயிர் காக்கும் கருவிகள் ஆதரவில் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தொடர்பு பட்டியலில் இருந்த சுமார் 240 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தையொட்டி இருக்கும் தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் இன்று (ஜூலை 22) காலை முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, வாளையார் சோதனை சாவடியில் தமிழக சுகாதாரத் துறை ஊழியர்கள் முழு கவச உடை அணிந்து பேருந்து, கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்தடங்களிலும் சுகாதாரத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வருபவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நிபா வைரஸ் காய்ச்சலில் தாக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா? - அமைச்சர் சொன்ன அசத்தல் அப்டேட்! - SPORTS QUOTA FOR ENGINEERING