மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் என்பவர், இடிந்து விழும் நிலையில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியில் 5 வகுப்பு வரை உள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது இந்தப் பள்ளியில் அறை, போதிய விளையாட்டு மைதானம், காலை மற்றும் மதிய உணவுகளை மாணவ மாணவிகள் உட்கொள்வதற்குக் கூட போதுமான இட வசதி இல்லை. மேலும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டடத்தில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சேதமடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் வாய்ப்புள்ளது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருவதால் பெரும் அசம்பாவிதம் உயிர் சேதம் ஏற்படும் முன் கட்டடத்தை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சூழல் கருதி நீதிமன்றம் இந்த பள்ளியை இடித்து அப்புறப்படுத்தி புது பள்ளி கட்டி தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக நேற்று (செப்.27) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பள்ளி கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளியில் மாணவ, மாணவிகள் பயின்று வரும் புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதனைப் பார்த்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த அபராத தொகையை அடையார் புற்றுநோய் காப்பக மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்கள்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்