கோயம்புத்தூர்: தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் கடந்த 3 தினங்களாக, மதியத்திற்கு மேல் கனமழை பெய்து வருகிறது.
அப்போது, பள்ளி மாணவ மாணவிகள் வேலை முடிந்து வீடுகளுக்குத் திரும்புவோர், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கோவை மாவட்டத்தில் அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர் உள்ளிட்ட பாலங்களுக்கு அடியில் மழை நீர் தேங்கி விடுவதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (அக்.15) ஒரு நாள் கோவையில் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு அரை நாள் விடுப்பு அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் இன்று மதியம் வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும், மதியத்திற்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.