சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ''தலைக்கவசம் உயிருக்கு பாதுகாப்பு, நரேந்திர மோடி நாட்டுக்கு பாதுகாப்பு'' எனும் தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார்.
அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச். ராஜா, ''கடந்த 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்தநாள் வரை மக்கள் சேவை பணிகளில் பாரதிய ஜனதா கட்சி தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து இளைஞர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது பாராட்டுக்கு உரியது'' என்றார்.
தொடர்ந்து பேசிய எச். ராஜா, ''திருப்பதியில் மக்களுக்கான பிரசாதத்தில் லட்டு தயாரிப்பதில் மிருக கொழுப்பு கொண்டு செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதிப்படுத்தி உள்ளார். சாமுவேல் ராஜசேகர் ரெட்டி ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்தபோது வெங்கடாசலபதிக்கு ஏழுமலையில் இரண்டு மலை தான் உள்ளது, மீதம் ஐந்து மலை இல்லை என்று கூறினார். அதே மலையில் தான் அவர் அடிபட்டு காலமானார்'' என்றார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 15 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.. சென்னை காவல்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்துவ மதவெறி ஆட்சியில், உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் போற்றுகின்ற பிரசித்தி பெற்ற லட்டுவில் மாட்டு கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பை கலந்து விற்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு மாநில தலைவராக ஒருவர் இருக்கிறார் அவருடைய பெயர் கே. செல்வம். ஆனால், அவர் பெரும் தொகை ஈன்றதால் அவர் செல்வப்பெருந்தகை ஆனார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் அவருடைய பெயர் கே.செல்வம் என்று தான் பதிவிடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த ஜெய்சங்கர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நான்கு பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் செல்வப் பெருந்தகைக்கு சம்பந்தம் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். அவரை காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரிக்க பட வேண்டும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டும்'' என எச். ராஜா கூறினார்.