வேலூர்: வேலூர் மாவட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் நடைபெற்றது. இதில், பாஜக ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, மாநில பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு முன்னதாக எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "நேற்று டிடி தமிழ் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டுவிட்டது. இது பாடியவர்களின் பிழை. அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆளுநரை தரம் தாழ்த்தி பேசுகிறார்கள்.
மன நோயாளியைப் போல் பேசுகிறார்கள் இவர்கள். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆளுநரை பேசுவது தவறு. மேலும், பெரும்பான்மை சமுதாயமான இந்து சமுதாயம் பண்பாடு கலாச்சாரத்தை கேவலமாக பேசியவர்கள் இவர்கள் தான். மாநில அரசு அதன் வரம்பை மீறி செயல்படும் போது மத்திய அரசு, மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. மாநில அரசு எல்லையை மீறுகிறார்கள்.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும். இனத்தை அல்ல. இந்த நாட்டின் பிரதமரே திராவிடர் தான். திமுக அரசு எல்லா துறைகளிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது ஒரே பேராசிரியர்கள் பல பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றியது முறைகேடானது. அதனால் தான் அவர் துறை மாற்றப்பட்டுள்ளார். அது நல்லது தான். துணை முதலமைச்சர் உதயநிதிக்கு என்ன திறமை இருக்கிறது என்று அவரை துணை முதலமைச்சராக போட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் மின்சாரத் துறையில் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த துறை செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. இதே போல் தான் எல்லா துறைகளும் உள்ளன. சிறுபான்மையினர் மீது புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
தமிழக முதலமைச்சர், தென் மாநில காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் தடுப்பிற்காக மற்ற மாநிலங்களின் உதவியை கோரியுள்ளனர். போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கு எங்களால் கையாலாகவில்லை என ஒத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் சிந்தடிக் என்ற போதைப்பொருளை ஒரு கிராம் கூட தமிழக காவல்துறையால் பறிமுதல் செய்யப்படவில்லை. அப்படி இருக்க மற்ற மாநில காவல்துறையின் உதவியை இவர் நாடியுள்ளது கும்பலில் அவரும் கோரஸ் பாடுகிறார்" எனக் கூறினார்
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்