வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சுண்ணாம்புபேட்டை புங்கனூர் அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராம்பாபு(45), இவர் குடியாத்தம் பெரியார் சிலை அருகே சாலை ஓரத்தில் பானிபூரி கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றி வரும் அருண் கண்மணி(35), கடந்த 12ஆம் தேதி ராம்பாபுவின் பானிபூரி கடைக்குச் சென்று ராம்பாபுவுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ராம்பாவு குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் பத்மநாபன் காவலர் அருண் கண்மணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பானிபூரி கடைக்காரர் ராம்பாபுவிடம் தகராறில் ஈடுபட்டு, ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றத்திற்காகக் காவலர் அருண் கண்மணியை நேற்று (திங்கட்கிழமை) பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார் ராகுல்..! இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டி!