சென்னை: அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் அரசினுடைய நற்பெருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி ஜிஎஸ்டி துணை ஆணையரை, மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வருவாய்த்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவியிலிருந்து விலக்கக்கோரி இந்திய குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார். அதில் அமலாக்கதுறையில் உள்ள அரசு அதிகாரிகளின் சுதந்திரம் என்பது நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்ற பின்பு பறிக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக அமாலக்கதுறையை, பாஜக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், என்னுடைய 30 ஆண்டுகால பணியில் மேல் அதிகாரிகளின் தலையீடோ அல்லது அரசியல் கட்சிகளின் தலையீடோ இருந்தது கிடையாது. ஆனால் சமீப காலமாக என்னுடைய பணியில் அரசியல் கட்சிகளின் தலையீடு என்பது அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏழை விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், அமலாக்கத்துறை அதிகாரிகளைச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் இது போன்று அரசுக்கு எதிராகப் போராட்டம் மேற்கொண்டதாலும் மற்றும் அரசினுடைய நற்பெருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும், தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி துணை ஆணையர் பால முருகன் விரைவில் ஓய்வு பெற இருந்தநிலையில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிப்ரவரி 1 முதல் மதுபானங்கள் விலை உயர்வு - டாஸ்மாக் அதிரடி அறிவிப்பு! - மது பிரியர்கள் அதிர்ச்சி!