கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு முக்கிய தொகுதியாகத் திகழ்வது, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி. இந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேசிய கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த விளவங்கோடு தொகுதியில், காங்கிரஸ் கட்சியே பலமுறை வெற்றி கண்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் கேரளா எல்லையில் உள்ள இத்தொகுதியில் மலையாளம் பேசும் மக்கள் அதிகமாகவே உள்ளதால், இங்கு தேசிய கட்சிகளின் ஆதிக்கமும் காணப்படுகிறது. தற்போது வரை, 17 தேர்தல்களை சந்தித்துள்ள இத்தொகுதியில், 12 முறை காங்கிரஸ் கட்சியே வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: இங்கு 2011, 2016, 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயதரணி, தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டு தேர்தலில் விஜயதாரணி 87 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அதாவது, விஜயதாரணிக்கு 52.12 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயசீலன், 58 ஆயிரத்து 84 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு 35.04 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது.
4 பெண்கள் மோதும் விளவங்கோடு தொகுதி: இப்படி காங்கிரஸ் ஆதிக்கம் நிறைந்த விளவங்கோடு தொகுதியில், எம்எல்ஏ-வாக செயல்பட்டு வந்த விஜயதாரணி திடீரென காங்கிரஸிலிருந்து பாஜகவிற்குத் தாவினார். நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 4 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதனால் பெண்கள் மோதும் தொகுதியாக விளவங்கோடு தொகுதி மாறியுள்ளது.
காங்கிரஸ்: விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் பேத்தி. இவரது தந்தை கத்பர்ட் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். 1976 ஆம் ஆண்டு பிறந்த தாரகை கத்பர்ட் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் எம்ஏ, எம்.பில், பிசிடிசிஏ, எம்பிஏ, பிஎச்டி படித்துள்ளார். மேலும், தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர்.
காங்கிரஸ் கட்சியில் அகில இந்தியக் காரிய கமிட்டி உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் செயல்பட்டு வருகிறார். மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவராகவும், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். தாரகை கத்பர்ட்-க்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தற்போது அவர் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
காங்கிரஸ் வேட்பாளரான தாரகை கூறும் போது, "விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய மிக்க தொகுதியாகும். காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் மீண்டும் இந்த தொகுதி காங்கிரஸ் கோட்டை என நிரூபிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக: விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பில் வி.எஸ் நந்தினி போட்டியிடுகிறார். 42 வயதான வி.எஸ் நந்தினி பாஜகவின் மாவட்டச் செயலாளர்களின் ஒருவராக உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தற்போது, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக எந்தவித மனுக்களோ அல்லது பரிந்துரைகளோ செய்யாத நந்தினி விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அந்தத் தொகுதியில் உள்ள பாஜகவின் முக்கிய கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த முறை 2வது இடம் பிடித்த பாஜக இந்த முறைப் பெண் வேட்பாளரை அறிவித்து, அதற்கான பணியினை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து பாஜக வேட்பாளர் நந்தினி கூறும் போது, "பிரதமர் மோடியின் பல சாதனை திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. மோடி தான் மீண்டும் பிரதமர் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே இந்த தொகுதியை மேம்படுத்தும் வகையில் நிச்சயம் பல்வேறு திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்து வெற்றி பெறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராணி நிறுத்தப்பட்டுள்ளார். 41 வயதான இவர் தற்போது அந்த கட்சியின் மாநில மகளிர் அணி துணை செயலாளராகப் பதவியில் உள்ளார். நாகர்கோவிலில் உள்ள சைமன் நகர் பகுதியில் வசித்து வரும் ராணி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான தொழிற் பயிற்சிகளை அளித்து வருகிறார். விளவங்கோடு தொகுதிக்கு எந்தவித தொடர்பும் இல்லாத நிலையிலும் இவரது தொண்டு நிறுவனம் மூலமாகவும், இவர் நடத்தி வரும் பல அமைப்புகளின் மூலமாகவும் விளவங்கோடு தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர்.
இதுகுறித்து அதிமுக வேட்பாளர் ராணியிடம் கேட்டபோது, "மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெண்களுக்காகவே பல்வேறு திட்டங்களைத் தந்தவர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது மீனவர்கள், விவசாயிகள், மாணவ - மாணவிகள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களைத் தந்துள்ளார். நிச்சயம் இரட்டை இலை இங்கு வெற்றி பெறும்" என நம்பிக்கையும் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி: விளவங்கோடு தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் மைலோடு பகுதியைச் சேர்ந்த ஜெமினி என்பவர் போட்டியிடுகிறார். என்.எஸ்.சி விலங்கியல் மற்றும் பி.எட் எம்.பில் படித்து உள்ள ஜெமினி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது கணவர் சேவியர் குமார் சமீபத்தில் மைலோடு ஆலய பங்குத்தந்தை அலுவலகத்தில் நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியாக ஜெமினி செயல்பட்டார். ஆசிரியர் பணி காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கியதாகக் கூறப்பட்டது. தற்போது கணவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக வேட்பாளர் ஜெமினி கூறும்போது, "நாம் தமிழ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த தொகுதியில் எனக்கு வாய்ப்பு தந்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர்கள் படையின் உழைப்பால் நிச்சயம் இந்த தொகுதியில் நாங்கள் சாதிப்போம்" எனத் தெரிவித்தார்.
தொகுதி நிலவரம்: விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் 4 பெண்கள் மோதும் தொகுதியாக உள்ளது. தேசிய கட்சிகள் ஆதிக்கம் நிறைந்த தொகுதியில் மாநிலக் கட்சிகள் முத்திரை பதிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியின் நாஞ்சில் டோமினிக் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதில், காங்கிரஸ் கட்சியிலிருந்த விஜயதரணி வெற்றியைப் பெற்றார்.
அவருக்கு அடுத்தபடியாக பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் போட்டியிட்டு, 35 ஆயிரத்து 646 வாக்குகள் பெற்றிருந்தார். மூன்று முறை பெண் வேட்பாளர் வென்ற தொகுதி என்பதால், இந்த முறை அனைத்து கட்சிகளும் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. தற்போது, இந்த தொகுதியைப் பொறுத்த வரை பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக நெய்யாறு இடது கரை கால்வாய் தண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சனையாக உள்ளது. கடந்த 2004-ல் கேரளா அரசு நெய்யாறு இடது கரை கால்வாயில் தண்ணீர் திறப்பதை நிறுத்தியது. சுமார் 20 ஆண்டுகளாக நெய்யாறு இடது கரை கால்வாய் பிரச்சனை உள்ளது.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆண் வேட்பாளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்களும், 3 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 382 வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து இடைத்தேர்தல் நடைபெறுவதால், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் சின்னத்தைக் குறித்து தான் இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் ஓட்டுக்கள் விழும் என்பதால், எந்த கட்சி வெற்றி பெறும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.