கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர், வீடியோ குழுவினர் போன்றோர் அரசு வாகனங்களான ஜீப், கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தி, வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் இந்த வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
அரசு வாகனங்கள் தவிர, தனியார் வாகனங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்கிறது என்பதை கண்காணிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி (GPS), சோலார் மூலம் இயங்கும் கேமரா (Solar Camera) அனைத்து வாகனங்களுக்கும் நேற்று (மார்ச் 16) பொருத்தப்பட்டுள்ளன.
இதேபோல், பொள்ளாச்சியிலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி மற்றும் சோலார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், சார் ஆட்சியருமான கேத்தரின் சரண்யா தலைமையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், "கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி சோதனை சாவடிகளில், சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும். அப்போது, போதிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரும் பொருட்களை, சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், சோதனை செய்யும் பொழுது முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும். இதில் வருவாய் துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட குழு என 8 தனி பறக்கும் படை செயல்படும். தேர்தல் நடைமுறை வந்ததால், சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் அமலுக்கு வரும்" எனத் தெரிவித்தார். இதனிடையே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, வருவாய்த்துறையினர் முக்கிய சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி சின்னங்கள், பிளக்ஸ் போர்டு ஆகியவற்றை அகற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் பணி! விழுப்புரத்தில் சோதனையில் களமிறங்கிய பறக்கும் படை..