மதுரை: தேசிய கைத்தறி தினமான இன்று (ஆக 7) மதுரை மாவட்டம் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொருளியல் மாணவர்கள் பேரையம்பட்டி கிராமத்தில் வாழ்ந்து வரும் நெசவாளர்கள் குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர். தலைமை ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலில் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் மற்றும் முதுகலை புவியியல் ஆசிரியர் வீரவேல் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் செய்தனர்.
இந்த ஆய்வின்போது முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் கூறுகையில், "கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக தேசிய கைத்தறி தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடி வருகிறோம். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்த துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். நம் நாட்டில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதன் மூலம் கைத்தறியின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
மேல்நிலை முதலாம் ஆண்டு பொருளியல் மாணவர் மணிகண்டன் கூறுகையில், "கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மேம்பட வேண்டும். மேலும், இவர்களின் தொழில் இடுமானங்கள், உற்பத்தி செலவு, உற்பத்தி முறை, தொழில்நுட்பம், விற்பனை, வருவாய், நுகர்வு, சேமிப்பு, மற்றும் இவர்கள் எதிர்பார்ப்புகள் போன்ற சமூக-பொருளாதார மாற்றங்களில் மத்திய, மாநில அரசுகளின் தலையீடு மிகவும் அவசியம். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டால் தான் அந்த குடும்பங்களின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒட்டுமொத்த நெசவாளர்களுக்கு கிடைத்த விருது.. தேசிய விருது பெறும் திண்டுக்கல் நெசவாளர் பகிர்ந்த சுவாரஸ்யங்கள்! - national handloom award 2023