சென்னை: உறுதியான சான்றிதழ் (Bonafide certificate) வாங்க பள்ளிக்கு வந்த மாணவரை புத்தகம் ஏற்றுவதற்கு அனுப்பியதாக தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் கேள்வி எழுப்பிய நிலையில், பள்ளியில் உங்கள் மகனுக்கு சீட் கொடுக்க முடியாது என தலைமை ஆசிரியர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு, புத்தகங்கள் அரசால் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமாக புத்தகங்கள் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கிருந்து பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் எடுத்து வர வேண்டும்.
பாடப் புத்தகங்களை எடுத்து வருவதற்கான கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அனுப்பியுள்ளது. மேலும், மாணவர்களை இது போன்ற பணியில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை இது போன்ற பணிக்கு ஈடுபடுத்தி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
அந்த வகையில், சென்னை எம்ஜிஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களை அழைத்துச் சென்று புத்தங்களை ஆசிரியர்கள் ஏற்றி வந்துள்ளனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவரின் பெற்றோர் கேட்ட நிலையில், நான் அழைத்துச் செல்லவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ‘மாணவருக்கு இங்கு இடம் இல்லை. நீங்கள் எந்த எம்எல்ஏ மற்றும் கவுன்சிலரை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.
பெற்றோர் அனுமதியில்லாமல் ஏன் வந்தாய் என்று மாணவரிடம் கேள்வி எழுப்பினார். போனஃபைடு சான்றிதழ் வாங்க வந்த மாணவர்களை ஏன் புத்தகம் ஏற்றுவதற்கு அனுப்புனீர்கள் என்று பெற்றோர் வாக்குவாதம் செய்துள்ளனர். நான் மாணவர்களை போன் செய்து கூப்பிடவில்லை என்றும், கூப்பிட்டால் அவர்கள் வரவில்லை என்று கூற வேண்டுமென்று ஆசிரியர் கூறியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சி கல்வி அதிகாரி சரண்யா ஹரி, எம்ஜிஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமராஜை இன்று (திங்கட்கிழமை) நேரடியாக விசாரணைக்கு அழைத்துள்ளார். ஆனால், சர்சைக்குள்ளான தலைமையாசிரியர் ராமராஜ், கடந்த மே 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், பணியிடை நீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருத்து கணிப்புகளின்படி, மீண்டும் மோடியே பிரதமர்! - தமிழிசை சௌந்தர்ராஜன் - Lok Sabha Election 2024