மயிலாடுதுறை: கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக கடந்த 3ஆம் தேதி இரவு அதிவேகமாக சிதம்பரம் சென்ற (TN 68 N 1099) அரசு சிறப்புப் பேருந்து, மயிலாடுதுறை செங்கழுனி பிள்ளையார் கோயில் அருகே உள்ள கேஎஸ் பட்டு சென்டர் கடை முன்பு வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே மூன்று சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளியின் மீது நேராக மோதி அரசு பேருந்து விபத்தை ஏற்படுத்தியது.
அந்த விபத்தில், ஸ்கூட்டரில் சென்ற மாற்றுத்திறனாளியான மயிலாடுதுறை கிட்டப்பா தெருவைச் சேர்ந்த அரபத்துல்லா(38) மற்றும் அவரது மனைவி சகிலாபானு(36) ஆகியோர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், இவர்கள் சென்ற வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து தகவலறிந்து சம்ப இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், தலையில் அடிபட்ட மாற்றுத்திறனாளி அரபத்துல்லா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே அரசு பேருந்தை ஓட்டி வந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த முரளி செல்வன்(37) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய பேருந்தை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், சாலையில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மாற்றுத்திறனாளி வாகனம் மீது மோதி ஏற்படுத்திய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.